Saturday, January 5, 2013

அற வழியில் நால்வர்: ஒரு பார்வை

ramana maharishi

அற வழியில் நால்வர்: ஒரு பார்வை


பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியைப் பற்றி அறிந்தவர்களுக்கு, அவர் மதுரையில் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்ற போதெல்லாம் அறுபத்துமூவராகிய நாயன்மார்கள் முன் எப்படி உள்ளம் உருகி நின்றார்
என்பது தெரிந்திருக்கும். அந்த நாயன்மார்களில் மூவரையும், சிவ புராணம் அருளிய மாணிக்கவாசகர் என்ற பெருந்தகையையும் சேர்த்து நால்வர் என்று பொதுவாகக் குறிப்பிடுவர். அனேகமாக எல்லாச் சிவன் கோவில்களிலும் இந்நால்வருக்கும், ஸ்ரீ நடராஜரைப் பார்த்த மாதிரி ஒரு தனி சந்நிதி கூட அமைந்திருக்கும். அந்நால்வரின் வாழ்நாள் எண்ணிக்கை பற்றி ஒரு வெண்பா உண்டு. அந்த வெண்பாவையும், பகவான் ரமணர் இயற்றிய “உபதேச உந்தியார்” செய்யுள் ஒன்றையும் கலந்து ஒப்பிட்டு எழுதப்படுவதுதான் இக்கட்டுரை. இதன் மூலம் அந்நால்வரின் வாழ்க்கை அற நெறிகளை, ரமணர் கூறிய விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்பதுதான் எமது நோக்கம். “உபதேச உந்தியார்” என்ற அந்த நூலில் பகவான் சம்பிரதாயமான நான்கு யோக முறைகளைப் பற்றி முதல் 15 செய்யுள்களில் கூறிவிட்டு, மீதி உள்ள 15 செய்யுள்களில் வேத சாரமாகிய “தன்னைத் தான் அறிந்து” கொள்ளும் முறையான மகா யோகம் என்று குறிப்பிடப்படும் “நான் யார்?” என்ற நேர் வழியையும் விளக்கிச் சொல்கிறார்.
திருநாவுக்கரசர் என்ற அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் என்ற அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடை ப் பிடித்தவர்கள் என்று கூறப் படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். இம்மார்கங்களைச் சற்று வேறுபடுத்திச் சொல்பவர்களும் உண்டு . இந்நால்வர்களில் அப்பரும் சம்பந்தரும், வயதில் பெரும் வித்தியாசமானவர்கள் என்ற போதிலும் சம காலத்தவர்கள். சுந்தரர், அறுபத்துமூவரைப்பற்றியும் எழுதியுள்ளதால் பிற்காலத்தவர் ஆவார். மாணிக்கவாசகர் காலம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருப்பினும், அவரைப் பற்றி இம்மூவர் எழுதிய தேவாரத்தில் சில குறிப்புகள் காணப்படுவதுபோல் இருப்பதால், அவர் இவர்களினும் மூத்தவர் என்று கொள்ளலாம். அது எப்படி இருப்பினும், எம்முறையைப் பின் பற்றினாலும் உய்வதற்கு ஒரு வழி உண்டு என்று வாழ்ந்துகாட்டிச் சென்றவர்கள் அவர்கள் என்பதே நாம் கருத்தில் கொள்ளவேண்டியது.
நான்கு வழிகள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு கொண்டவை அல்ல. அது மட்டுமன்றி ஒன்றிலொன்று இணையவும், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அதைப் பயில்பவர்கள் எளிதாகச் செல்லக் கூடிய வழிகள் தான் அவை. அதனால் எவர்க்கு எவ்வழி செல்லத் தகுமோ அதை அவர்கள் பின்பற்ற முடியும். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் தன் வழியைத் தானே தேர்ந்தெடுக்க முடியுமா முடியாதா என்பது பற்றி இப்போது நாம் அலசவில்லை. அது ஒரு தனி விவாதப் பொருள் என்று தற்சமயம் விட்டுவிடுவோம்.
அந்நால்வரின் வாழ்நாள் எண்ணிக்கை பற்றிய வெண்பாவானது:
“அப்பருக்கு எண்பத்தொன்று அருள்வாதவூரருக்கு
செப்பிய நாலெட்டில் தெய்வீகம் – இப்புவியில்
சுந்தரருக்கு மூவாறு தொன் ஞானசம்பந்தருக்கு
அந்தம் பதினாறு என்று அறி”
அப்பர் 81 வயதிலும், திருவாதவூரைச் சார்ந்த மாணிக்கவாசகர் 32 வயதிலும், சுந்தரமுர்த்தி நாயனார் 18 வயதிலும் திரு ஞான சம்பந்தர் 16 வயதிலும் காலமானார்கள் என்று தெரிவிக்கிறது இந்தப் பாடல்.



appar_thirunavukkarasarஎந்நாளும் தொண்டு புரிந்தே வாழ்ந்த அப்பர் தாச மார்க்கம் வழியில் வாழ்ந்தவர். எப்போதும் ஒரு உழவாரப்படை எனப்படும் ‘புல் செதுக்கி’ ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். அவரின் கடைசி காலத்தில் இறைவன் அவரைச் சோதனை செய்ததுண்டு. அவரின் மனோ திடத்தைச் சோதனை செய்வதற்காக புல் பூண்டுக்குப் பதிலாக வைரம், வைடூரியம் போன்ற நவ ரத்தினங்களை இறைவன் வரச் செய்தார். அப்பர் அதைக் கண்டாலும் பூண்டைப் போலவே அவைகளையும் செதுக்கியால் களைந்து எறிந்தார். அதாவது, இறைவன் அருட் பார்வை தவிர பொன் பொருள் எதுவும் ஒரு பொருட்டு அல்ல என்பதை நன்கு உணர்ந்தவராக இருந்ததால் அவரால் அப்படிச் செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த அப்பர் உண்மையிலேயே ஒரு தூய கர்ம யோகியே. அவர் 81 வயது வரை வாழ்ந்தார்.



மாணிக்கவாசகர் பக்தி மார்கத்தின் பிரதிநிதி என்று கொள்ளலாம். அவர் பொருட்டு மதுரையில் சிவ பெருமானே “பரியை நரியாக்கியது ” போன்ற சில திருவிளையாடல்களை நடத்தியுள்ள பெருமைக்கு உரியவர். அவர் அரசன் கொடுத்த செல்வத்தை சிவன் ஆலயம் ஒன்று கட்டுவதற்காக முனைந்த போது நடந்த நிகழ்ச்சி அது. சிவனே எழுந்தருளி காப்பற்றப்படும் அளவுக்கு உள்ள பக்திமான் அவர். ஊர் ஊராக, நாடு நாடாகச் சென்று பக்தி பரவசத்துடன் பாடல்களைப் பாடி வந்தவர் அவர். இப்போது ஆதி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் உள்ள அடி அண்ணாமலை கிராமம் தான் அப்போதைய திருவண்ணாமலையாக இருந்திருக்கக் கூடும். அவர் அங்கு சென்று பாடிய பாடல்தான் மிகவும் புகழ் பெற்ற திருவெம்பாவை. மலை சுற்றி வரும் கிரி வலப் பாதையிலேயே அக்கிராமத்தில் அவருக்கு ஒரு சிறு சந்நிதி உண்டு. இன்றும் அடி அண்ணாமலையாருக்குக் கும்பாபிஷேகம் நடக்கும் போதெல்லாம், மாணிக்கவாசகருக்குத்தான் முதல் கலச அபிஷேகம் நடை பெறுகிறது.
manikkavachakarமாணிக்கவாசரது திருவாசகம் , சிவ புராணம் இவற்றை அடியொற்றியே,  பிற்காலத்தில் பகவான் ரமணரைப் பற்றிய ரமண புராணம் , சந்நிதி முறை எல்லாம் ரமண பக்தர் முருகனார் இயற்றினார். அதைக் குறிப்பால் உணர்த்துவது போல, பகவானும் முருகனாரும் சந்திக்கும் முதல் சந்திப்பில் முருகனாரை பகவான் “திருவாசகம் போல் எழுதுவீரோ ?” என்று கேட்கிறார். அப்படியே பின்பு நடந்தது என்று சொன்னால் அந்த சந்திப்பின் மஹிமையையும் உணரலாம், மகான்களின் மஹிமையையும் உணரலாம்.
அப்படிப் பாடிக்கொண்டு நாடு வலம் வந்தவர், தனது கடைசி காலத்தில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் தான் முன்பே இயற்றியிருந்த சிவ புராணத்தை மனம் உருகப் பாடுவதைக் கேட்டிருந்த ஒரு வயோதிக அந்தணர் அந்தப் பாட்டின் கையெழுத்துப் படிவத்தை வேண்ட, மாணிக்கவாசகரும் அதைச் சொல்ல சொல்ல அந்தணரும் ஓலையில் எழுதிக்கொள்கிறார். மறுநாள் காலை கோவிலுக்குச் சென்ற மாணிக்கவாசகருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் கோவிலைத் திறந்து கருவறைக்குள் சென்ற குரு தீக்ஷிதர் இறைவன் பாதத்துக்கு அருகே ஓர் ஓலைச்சுருள் இருந்ததாகவும், அதை எடுத்துப் படித்துப் பார்த்ததில் அதில் மணிவாசகர் அடிக்கடி ஓதும் சிவ புராண வரிகள் தென்பட்டதாகவும், அதனால் அது அவருடையதாகத்தான் இருக்கும் என்று சொல்லி அவரிடம் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு அதன் பொருளையும் சொல்லித் தருமாறு வேண்டுகிறார்.
அப்போதுதான் மணிவாசகருக்கு முன்நாள் வந்து தன்னை புராணம் சொல்லச் சொல்லி ஓலையில் எழுதியவர் ஆனந்தக் கூத்தாடும் பெருமானே அன்றி வேறு எவரும் அல்லர் என்பதை உணர்ந்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, பொருள் வேண்டிக் கேட்டவருக்கு “இதுதான் பொருள்” என்று சொல்லிக் கொண்டே நடராஜர் திருப்பாதங்களில் கலந்து அங்கேயே முக்தி அடைகிறார். அந்நிகழ்ச்சியின் நினைவாக இப்போதும் மாணிக்கவாசகர் தரிசனம் என்று ஒரு நாள் ஆருத்ரா தரிசன நாளுக்கு முன்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி வாழ்ந்த மாணிக்கவாசகர் உண்மையிலேயே ஒரு தூய பக்தி யோகியே. அவர் 32 வயது வரை வாழ்ந்தார்.



sundararசுந்தரமூர்த்தி நாயனாரை சக மார்கத்தின் பிரதிநிதி என்று கொள்ளலாம். அதன் படி இறைவனை ஒரு தோழனாகவோ தோழியாகவோ கருதி ஒரு சக பாவத்தை வளர்த்துக் கொள்ளலாம். இதன் வேறொரு வடிவம் தான் நாயக-நாயகி பாவம் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு நண்பனாக சிவ பெருமான் வெவ்வேறு வேலைகளை சுந்தரருக்குச் செய்து கொடுத்திருக்கிறார். சுந்தரருக்கு அவர் மனைவியுடன் மனத்தாபம் ஏற்பட்டபோது, அவர் பொருட்டு இறைவன் தூது போயிருக்கிறார் என்றால் அந்த நட்பின் வலிமையும் பெருமையும் புரியும். அவர் திருவாரூரில் இருந்தபோதுதான் 63 நாயன்மார்களைப் பற்றியும் விவரங்களைத் தொகுத்து வழங்கினார். அத்திருவாரூரில் இப்போதும் “தூது நடந்த தெரு” என்று ஒரு தெரு இருக்கிறது.
வேறொரு முறை, சுந்தரர் காட்டின் வழியாக வரும் போது, அவர் தன் கையில் பொற்காசுகள் இருந்தால் கொள்ளையர்கள் வழிப்பறி செய்யக்கூடும் என்ற பயத்தில் இறைவனை வேண்டிக்கொண்டு, அருகில் இருந்த ஆற்றில் அவை அனைத்தயும் போட்டுவிட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். ஊர் திரும்பிய சுந்தரர் அதை கோவில் அருகே உள்ள குளத்திலிருந்து எடுக்கும்போது அப்பொன்னின் தரம் பற்றி சந்தேகம் கொண்டார். நண்பனாகிய இறைவனையே சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவருக்கு இறைவனிடம் அன்யோன்யம் உண்டு. ஆதலால் குளக்கரையில் அமர்ந்திருந்த விநாயகரிடம் பொன்னின் தரத்தைச் சோதிக்கச் சொல்கிறார். அதன் நினைவாகப் பெயரிடப்பட்ட விநாயகரை இன்றும் அங்கே காணலாம். இப்படியாக இறைவனிடம் தோழமை கொண்டு வாழ்ந்த சுந்தரர் 18 வருட காலமே இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தார்.






sambandhar1அவரது பெயரே குறிப்பிடுவதுபோல், திரு ஞான சம்பந்தர் ஞான மார்கத்தின் பிரதிநிதி. சிவனின் துணைவியாகிய பார்வதி அம்மன் அழுது கொண்டிருந்த குழந்தை சம்பந்தருக்கு தனது முலைப் பாலையே அளித்ததும், அதைக் குடித்து விட்டு அது வரை பேசாத குழந்தை உடனே “தோடுடைய செவியன் …” என்று முதல் பாடலாக பாடவும் பேறு பெற்ற ஞானப் பிறவிதான் அவர். அப்படி ஆரம்பித்து அவர் இயற்றிய பாடல்கள் மற்றவர் இயற்றியதை விட எண்ணில் ஏராளம் ஏராளம். அவர் உயிருடன் உலகில் இருந்ததோ மற்றவர்களை விட மிக மிகக் குறுகிய காலம் . அவர் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும்போது, அவருக்கு இறைவன் உதவியும் செய்கிறான், பாடங்களும் நிறையப் புகட்டுகிறான். அவருக்கு அண்ணாமலையார் எங்கு ஒளி வடிவமாய் காட்சி தருகின்றாரோ அதே அரகண்டநல்லூர் என்னும் இடத்தில் பகவான் ரமணருக்கும் காட்சி தருகின்றார். ஞானத்தின் திரு உருவாய் விளங்கிய சம்பந்தர் 16 வயது வரை வாழ்ந்தார்.
நமக்குக் காலமும் இங்கு பக்கங்களும் இருப்பின் இம்மகான்களைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். நாம் அலச வேண்டிய முக்கிய விஷயத்துக்கு இவர்களைப் பற்றி இவ்வளவு தெரிந்துகொண்டது போதும் என்று நினைக்கிறேன். இம்மகான்கள் வெவ்வேறு நெறிகளைப் பின்பற்றினாலும், அவர்கள் அனைவருமே கோவில்களுக்குச் செல்வது, அங்குள்ள இறைவன்-இறைவி மேல் பாடல்கள் இயற்றுவது என்ற வழக்கத்தைக் கடைசி வரை கடைப்பிடித்தனர். அதனாலேயே அந்தத் தலங்கள் யாவும் ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்ற புகழோடு விளங்குகின்றன. அதனால் வெறும் பாடல்கள் மட்டும் பாடி விட்டால், அதைப் பக்தி வழி என்று கொள்ளக்கூடாது. பாடுபவர் வாழும் முறையையும், அவருக்கு நேரும் அனுபவங்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும். அது தவிர வெவ்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டாலும், அவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரே ஒரு வழியே முதன்மையானதாக இருக்கும்; மற்றதன் பாதிப்புகளும் ஓரளவுக்கு இருக்கும். நாம் மேலே சொல்லப்பட்ட நான்கு வழிகளைப் போற்றிய அந்நால்வர்களின் நிறைவு கால வயதைப் பார்த்தால் வேறு ஒன்றையும் காட்டுவது போல அமைந்திருக்கிறது. அதை விளக்கத்தான் பகவான் இயற்றிய உபதேச உந்தியார் பாடல் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து மேலும் சில விவரங்களை அலசிப் பார்க்கிறோம். அந்தப் பாடல்தான் இது:
“திடம் இது பூஜை ஜபமும் த்யானம்
உடல் வாக்கு உளத் தொழில் உந்தீபற
உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற”
இச் செய்யுளின்படி “நிச்சயமாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் பூஜை, ஜெபம், த்யானம் மூன்றும் முறையே உடல், வாக்கு, மற்றும் உள்ளத்தால் செய்யப்படும் தொழில்கள்தான்; மேலும் அவை முறையே ஒன்றில் ஒன்று உயர்வானது”. அதாவது அம்மூன்றில் த்யானமே உத்தமமானது. மற்றவைகளை ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரிசைப் படுத்தலாம்.
இந்தக் கூற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் , சொன்னவர் ஒரு மஹரிஷி. மற்றும் அவர் சொல்லும்போதே அதை ” திடம் இது..” என்று தொடங்குகிறார். ஆகையால் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு பார்க்கும்போது, முதலில் நாம் அவை மூன்றையுமே வெவ்வேறு விதமான தொழில் வடிவம் என்று கூறுவதை முதலில் பார்க்கவேண்டும். எந்தக் கருவியைக் கொண்டு செய்யப்படுகிறதோ அதில் மட்டும் தான் வேற்றுமை தெரிகிறது. பூஜை (கர்மம்) உடல் உறுப்புகளாலும், ஜெபம் (பக்தி) உணர்வு அலைகளாலும், தியானம் (சகமார்க்கம்: தோழமை/ எப்போதும் நினைவில் கொள்வது) எண்ண அலைகளாலும் செய்யப்படுகிறது. இந்த மூன்று நிலைகளில் தான்-மற்றது என்ற பாகுபாடு உண்டு. அதாவது செய்பவன்-செய்யப்படுவது என்ற இருநிலை பேதம் உள்ளது. மற்றும் இந்நிலைகளில் தான் ஒன்றை ஒன்று ஒப்பிட்டு, உயர்ந்தது-தாழ்ந்தது என்றும் சொல்லமுடியும். மேலும் , இம்மூன்றினும் முதல் இரண்டான கர்மம், பக்தி நெறிகளில் செய்கை-செயல் பாகுபாடு என்பது கண்ணால் காணக்கூடிய பொருட்கள் அளவிலும், சக மார்கத்தில் அப்பாகுபாடு உணரக் கூடிய உள்ளத்தளவில் மட்டுமே உள்ளது. அம்மூன்றினும் உள்ள பொதுத் தன்மையானது மேலே குறிப்பிடப்பட்ட இருநிலை பேதம் தான்.
உபதேச உந்தியாரில் முதல் 15 செய்யுள்களில் இம்மூன்று யோக நெறிகளை விளக்கிவிட்டு , பின் வரும் 15 செய்யுள்களில் ஞான மார்கத்தின் பெருமையை ரமணர் விளக்குகிறார். இவ்வாறான மூன்றுக்குப் பதினைந்து, மற்றும் ஒன்றுக்குப் பதினைந்து என்ற கணக்கே ஞான மார்கத்தின் பெருமையைப் பறை சாற்றுவதுபோல் அமைந்திருக்கிறது.
அவரவர் தன்மைக்கு ஏற்ற வழியை ஒருவர் தேர்ந்தெடுக்கும்போது, இங்கே கூறப்பட்டுள்ள நான்கு வழிகளில் வந்த நால்வர்களின் வாழ்நாள் எல்லை நமக்கு உணர்த்துவது என்ன? நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா? நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள். தேகத்தைத் துறந்து முக்தி அடையும் போது ஞான வழியில் வந்த சம்பந்தருக்கு 16 வயதும், சக மார்க்கத்தைப் பின்பற்றிய சுந்தரருக்கு 18 வயதும், பக்தி வழி நின்ற மணிவாசகருக்கு 32 வயதும், கர்ம யோகியான அப்பருக்கு 81 வயதும் ஆகியிருந்தது. அதாவது கர்ம வழியில் நின்றவருக்கு விதேக முக்தி காண வாழ்நாட்கள் மிகுதியாகவும், ஞான மார்கத்தில் நின்றவருக்கு அது குறைவாகவும் இருப்பது கண்கூடாக இருப்பது தெரிகிறது.
nalvar_sculptureஏற்கனவே நாம் பார்த்தபடி ஜீவன் முக்தர்களான நால்வர்களுக்கு முக்தி நிலை என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் வரக்கூடியது. ஆதலால் அவர்களை சாமான்யர்களாக எண்ணாது, அவர்கள் வாழ்ந்த கால எண்ணிக்கையை கூர்ந்து கவனித்தால் அதிலும் நமக்கு ஒரு படிப்பினை இருக்கும் போலிருக்கிறது. மேலே குறிப்பிட்டபடி, செயல் திறன் மிக்க கர்ம யோக வழி நிற்பவரை விட மிகவும் சூக்ஷமமான ஞான வழி செல்பவர் வெகு சீக்கிரமே கைவல்ய முக்தி அடையக்கூடும் என்று சொல்ல முடியுமோ? அல்லது, நாட்கள் பல ஆனாலும் கர்ம யோகம் ஒருவரை நல்வழி நடத்திச் சென்று மற்ற யோக நெறிகளுக்கும் தானே தவறாது இட்டுச் செல்லும் என்று கூறத்தான் இயலுமோ?
அதாவது, ஞானம் பற்றி அறிவு சற்றும் இல்லாத ஒரு சாமான்யர் தனிப்பட்டோ அல்லது பொதுவாகவோ சேவை செய்ய ஆரம்பித்து, அதுவே நல்ல மனத்துடனும் கருத்துடனும் செய்யப்படும்போது அதில் ஆர்வம் மிகுந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, செய்யப்படும் கர்மமானது செய்பவர் உள்ளத்தில் பக்தியாக மலரக்கூடும். அப்படி மலரும் பக்தியின் விளைவாக, அவர் மனத்தில் அந்த செய்கை மேலோ அல்லது அதன் பயனை அடைபவர் மேலோ ஓர் தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ளலாம். அது உலகியல் அளவில் உள்ள ஒரு உணர்ச்சி. அத்தோழமை உணர்ச்சியே முதுர்ச்சி பெற்ற நிலையில், தனக்கும் பிறருக்கும் எந்த ஒரு வித்தியாசமு ம் காணமுடியா ஒன்றிய நிலையாக உணரப்படுமோ? உணர்ச்சி படிப்படியாக வளர்ந்து முற்றுவதற்கு கால தேசம் தேவைப்படுகிறது. அப்படி அந்த முற்றிய நிலைக்கு வளர்வதற்குத் தேவைப்படும் காலவரையைக் குறிப்பிடும் வகையில், நாம் பார்த்த சமயக் குரவர் நால்வரின் வயது வரம்புகளை அமைத்து, இறைவன் நமக்கு அதை சூக்ஷமமாக உணர்த்துகிறாரோ? எந்த வழியையும் ஒருவர் பின்பற்றலாம் எனும்போது, அந்த நான்கு முறைகளில் ஓர் உயர்வு-தாழ்வு இருப்பது போல் காணப்படுவதின் உள்ளர்த்தத்தை இப்போது நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அது நான்கு வழிகளில் உள்ள ஏற்றமோ இறக்கமோ அல்ல; அதைப் பின் பற்றுபவனின் துவக்க நிலையையே குறிக்கிறது என்றும், எது நேர்வழி எது சுற்றுவழி என்பதையும் ஓரளவு குறிப்பிடுகிறது என்றும் அறியலாம்.
கண்ணால் காணக்கூடிய உலகியலையும், மனத்தால் உணரக்கூடிய உணர்வுகளையுமே அறியும் ஒருவன், “கால தாமதம் செய்யாது சீக்கிரமே தன்னை உணர தானே வழியைத் தேர்வு செய்ய முடியாதா?” என்று கேட்கலாம். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்னும் மகாவாக்கியத்தை அறிந்தோருக்கு அப்படி ஒரு கேள்விக் கணை பிறக்குமோ?

No comments:

Post a Comment